yarlathirady.com

மாறாத மலையக மக்களின் வாழ்வியல் நிலையும்; மாறவிடாத தலைமைகளும்..!

[2024-08-26 12:14:29] Views:[22]

மலையகத்தின் நிலை மற்றும் அம்மக்களின் வாழ்வியல் நிலை என்பன இன்னமும் மோசமான நிலையில் தான் உள்ளது. அரசும், சம்பள நிர்ணய சபை என்பன பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வை உறுதி செய்தாலும் இன்னும் ஒரு சில கம்பெனிகள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. ஆனால் அரசியல்வாதிகளோ அனைத்துமே சரியாகி விட்டது போல பூசி மெழுகி வருகிறார்கள்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலே தங்களை கட்டுப்படுத்திக்கொள்ள தெரியாமல் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் தலைமைகள் எவ்வாறு எம் மக்களை சரியான வழியில் வழிநடத்த போகிறார்கள்? இதுவரையில் சரியான குடியிருப்பு வசதிகள் கூட இல்லாத சமூகம் எமது மலையக சமூகமே.

பெரும்பான்மையான மக்கள் இன்னும் லயன் (தொடர்) குடியிருப்புகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இதற்கான விடிவு எப்போது கிடைக்கும் என்பதை எதிர்பார்த்து மலையக சமூகம் ஏங்கிக்கொண்டிருக்கின்றது.

மலையகத்தின் பிரதான நகரங்கள் பல குப்பை கூழங்களால் நிரம்பி வழிகின்றன. பல நகரங்களில் வடிகால் அமைப்புகள் சரிவர கிடையாது. மழைக்காலங்களில் பெரும் சிரமத்திற்கு மத்தியிலேயே மக்கள் நகரங்களுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக மலையகத்தின் ஏனைய நகரங்களைவிட ஹட்டன் நகரம் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. துர்மணம் வீசிக்கொண்டு சுகாதார முறையற்ற நிலையில் பேருந்து நிலையங்கள் காட்சியளிக்கின்றன.

அதுமட்டுமா அநேக தோட்டப்புற பகுதிகள் பலவற்றுக்கு ஒழுங்கான போக்குவரத்து வசதி இல்லை, பாதைகள் இல்லை, தங்கள் வேலைகளை முடித்தாலும் இரண்டு மணித்தியாலங்கள் பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் அவலநிலை இன்னும் தொடர்கிறது.

மேலதிக வகுப்புகளுக்கு சென்று வரும் பாடசாலை மாணவர்களின் நிலையும் இதுவேயாகும். ஒரு அவசர நேரத்தில் ஒருவரை வைத்தியசாலை அழைத்து செல்வது என்றாலும் போக்குவரத்து பாதைகள் இன்மையால் பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இத்தகைய பிரச்சினைகள் இருப்பது எமது அரசியல் தலைமைகளுக்கு நன்றாக தெரிந்திருப்பினும் தெரியாதது போலவே காட்டிக் கொள்வார்கள். எமது மலையக சமூகம் முன்னேறி விட்டது என ஊடக சந்திப்புகளிலும் அரசியல் மேடைகளிலும் முழங்கும் அரசியல் தலைமைகளே!

எமது மலையக சமுதாயம் சற்று முன்னேறி இருப்பது உங்களால் அல்ல எமது மலையகத்தை சார்ந்தவர்களின் விடாமுயற்சியினால் அயராத கல்வியினால் மட்டுமே. தங்களது சுய முயற்சியாலேயே அவர்கள் தங்களை மேல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்களே தவிர உங்கள் முயற்சியின் காரணமாக அல்ல.

இன்னமும் மத்திய கிழக்கு நோக்கி எமது மலையக தாய்மார்கள் பணி பெண்ணாக தொழிலுக்காக சென்று கொண்டு தான் இருக்கின்றனர். இதனை எந்த ஒரு அரசியல் தலைமையும் தடுத்து தீர்வு கண்டதாக வரலாறு இல்லை.

சொகுசு பங்களாக்களில் ஆடம்பர வாழ்க்கை வாழும் உங்களுக்கு, கொட்டும் மழையில் அட்டைகளிடமும் குளவிகளிடமும் கடிப்பட்டு இரத்தம் சிந்தி உழைக்கும் மலையக சமுதாயத்தின் துயரம் 200 வருடம் அல்ல 2000 வருடங்கள் கடந்தாலும் புரியாது.

தமிழர் தாயகமும் மலையகமும் முன்னேறாமல் போனமைக்கு எமது தமிழ் அரசியல்வாதிகளே காரணம். பேச வேண்டிய முக்கிய பிரச்சினைகளை பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்வதுமில்லை, பேசுவதும் இல்லை. அதனாலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிய தெளிவு தென்னிலங்கைக்கு தெரியாமலே போய்விட்டன. இத்தகைய அரசியல்வாதிகள் எமது சமூகத்திற்கு தொடர்ந்தும் வேண்டுமா என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.