நெடுந்தீவில் குடிநீர் விநியோகம் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
[2026-05-20 21:18:32] Views:[92]
நெடுந்தீவில் உள்ள கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக மக்களின் முழுமையான தேவைகளை ஈடுசெய்ய முடியவில்லை. எனவே அங்கு புதிதாக மற்றுமொரு சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய போதே ஆளுநர் , அவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதிநிதிகளிடம் ஆளுநர் தொடர்ந்து தெரிவிக்கையில், நெடுந்தீவுக்கு வேறெந்த வகையிலும் குடிநீர் விநியோகத்தை வழங்க முடியாத நிலையில், கடல்நீரைச் சுத்திகரித்து நன்னீராக்கி வழங்கும் செயற்பாடே ஒரே தீர்வாக உள்ளது.
அத்துடன் அங்கு ஏற்கனவே இயங்கி வரும் கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு (Reverse Osmosis Plant) நிலையத்தின் ஊடாக மக்களின் முழுமையான தேவைகளை ஈடுசெய்ய முடியவில்லை.
அங்கு புதிதாக மற்றுமொரு சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும். இவ்வாறான புதிய திட்டங்களுக்கு, தற்போதைய செயற்றிட்டங்களில் எஞ்சியுள்ள சேமிப்பு நிதியினைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியினர் பரிசீலிக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.










